Saturday, December 29, 2007

அனைத்து உயிரும் ஒன்றடா..



ஹரியும் சிவனும் ஒன்றடா..


இதை புரியாத‌வ‌ன் வெறும் ம‌ண்ண‌டா..



அனைத்து உயிரும் ஒன்றடா..


இதில் பாகுபாடுகள் ஏனடா..



உன் ரத்தம் என் ரத்தம் சிவப்படா..


இதை புரிந்து கொள்ளடா மானிடா..

என்னை யார் சுமப்பார்?



பிறந்தவுடன் தகப்பன் முகச் சுளிப்பை சுமந்து


பின் பிறந்த தம்பியைச் சுமந்து


கல்வி கற்க புத்தகம் சுமந்து


பருவ வயதில் காத்லைச் சுமந்து



கூடலில் கணவனைச் சுமந்து


கருவுற்று குழந்தை சுமந்து


வறுமையிலும் குடும்பம் சுமந்து


மகள் வயிற்றுப் பேத்தியைச் சுமந்து



இன்று என் வாழ்வே கூன் ஆனதே


இறுதி ஊர்வலத்தில்


என்னை யார் சுமப்பார்?

பிரிவின் வலி


கண்ணிரை மறைக்க‌


முயல்கிறேன்..


கண்களிடமிருந்து!!

Saturday, July 21, 2007

*குப்பை*

தூக்கி எறிந்துவிடுவாய்
என தெரிந்தும்
மனம்
குப்பையானது..


நொடியாவது உன்
அன்பு கரம்
பற்ற..

*என் அன்பிற்கு*

அன்பை தா பெற்று கொள்கிறேன்..
துன்பம் தா தாங்கி கொள்கிறேன்..
உன் கஷ்டம் சொல் தோள் தருகிறேன்..
உவகை அடை உன்னுடன் சிரிக்கிறேன்..
அழு கண்ணிர் துடைக்கிறேன்..
முத்தமிடு இன்னும் கேட்கிறேன்..
நம்மை பிரித்து பார்க்காதே இறந்துவிடுவேன்..

Monday, June 25, 2007

*தாலாட்டு..*


முழுநேர வேலையில் உடல் களைத்த
குழந்தையின் அரைதூக்க கண்களை பார்த்து..

சோறூட்டி,மடி சாய்த்து
தன் அன்பினில் விழி மூட வைத்து
அலுங்காமல் தோள் தட்டி.

"ஆராரோ ஆரிராரோ என் த‌ங்க‌ம்" என‌
மெல்ல‌ முணுமுணுக்கும்
தாயின் அன்பு பாட்டு..

Friday, June 22, 2007

அவளின் யதார்த்த எதிர்பார்ப்புகள்


மேகத்தறியில் நெசவு செய்ய வேண்டாம்..
நிர்வாணம் மறைக்க உடை கொடு போதும்..

சூரியனை சுருக்கி வீரனாக வேண்டாம்..
என் கற்பிற்கு காவலாயிரு போதும்..

மின்னலை பிடித்து ஆபரணமாக்க வேண்டாம்..
இருப்பதை கரைக்காமல் வாழு போதும்..

விண்மின் பிடித்து விருந்து வைக்க வேண்டாம்..
பசிக்கும் வேளை கையளவு உணவிடு போதும்..

என்னழகை பாராட்ட வேண்டாம்..
தாய்மையடைய செய் போதும்..

மக்களை ஏமாற்றி செல்வம் வேண்டாம்..
நேர்மையாயிரு போதும்..

என‌க்கு முன் சுவ‌ர்க்க‌ம் பார்க்க‌ வேண்டாம்..
உன் விழிக‌ளை பார்த்து கொண்டே ம‌ர‌ணம் தா போதும்..

Thursday, June 21, 2007

பார்வைகள்..

மஞ்சு கொஞ்சம் பிரபலம் அந்த தெருவில். அடுத்தவர் பிரச்சனைகளை வாய் மெல்ல பிறந்தவள் என்றே சொல்லலாம். கணவன் வெளிநாட்டில் இருப்பதால் ஆடம்பர வாழ்க்கை. நினைத்ததேல்லாம் கிடைக்கும்போது அவளுக்கு என்ன கவலை.

அதே தெருவில் தமிழ் என்ற இளம்பெண் .நடுத்தர குடும்பம். அவள் இருக்கும் இடம் தெரியாது. அவள் குடும்பத்தை குடிவரும் நாள் அன்று பார்த்தது. வயதான அம்மா மட்டும் இருக்கிறார். அதிகாலையில் கிளம்பி எங்கோ வேலைக்கு செல்வாள்,வருவதற்கு ராத்திரி ஆகிவிடும். அதனால்தான் என்னவோ அவள் கற்பின் மீது தெருவாசிகளுக்கு நம்பிக்கை அறவே இல்லை.

இப்போது ஒரு வாரமாக‌ அழகான வாலிபன் அவள் விட்டிற்கு வருவதும்,போவதுமாய். ஏற்கனவே முள்ளில் விழுந்த சேலையாய் இருந்த அவள் கற்பை,தெருவாசிகள் அதிகம் கிழிக்க தொடங்கினர். விசயம் மஞ்சு காதுக்கு எட்ட "பிராஜக்ட் தமிழ்" உருவானது.

அன்று வழக்கத்திற்கு மாறாக அந்த இளைஞன் இரவில் விஜ‌ய‌ம். தெருவே மின்சார‌த்த‌டையால் இருளில் மூழ்கியிருக்க தமிழ் வீட்டில் மட்டும் விளக்கு வெளிச்சம். இன்று அவர்கள் ரகசியத்தை அம்பலபடுத்தி விடவேண்டுமென மஞ்சுவும்,இன்னும் இரண்டு வாயாடிகளும் அவ்வீட்டின் பின்புற ஜன்னலில் எட்டிபார்க்கின்றனர். அவர்கள் கண்ட காட்சி மனதை உறைய வைத்தது.

சன்னல் வழியே தெரிந்தது முதலில் அவள் அம்மா. கை,கால் மரத்து ஜடமாக ஒரு மூலையில் கிழிந்த பாயாய் படுத்திருக்கிறாள். இப்புறம் அவள் விளக்கு வெளிச்சத்தில் படித்து கொண்டு. அப்புறம் அவளம்மா கழித்த மலத்தை சுத்தம் செய்து கொண்டு அந்த இளைஞன்.உரையாடல் சத்தம் கேட்க அந்த கூட்டமே காதை தீட்டிக் கொண்டது.

இளைஞன் : நல்லா பிரிப்பேர் பண்ணிருக்கியாடா.. இன்னைக்கு அம்மா முகம் அழகா தெரியுதில்ல

தமிழ் : அவள் அழகாக இருக்கிறாள்ன்னு சொன்ன முதல் ஆள் நீதாண்டா. அது இல்லைன்னுதானே என் அப்பன் எவளையோ இழுத்துட்டு ஓடிட்டான். பத்தாததுக்கு வாதம் வேற. ஏதோ படிச்சு இருக்கேண்டா. நீ விட்டுக்கு போகலை.

இளைஞன் : நானே அநாதை. எனக்கிருக்கும் ஒரே தோழி நீதான். தினமும் நம்ம ஆபிஸில் நீ கஷ்டபடுறது,அப்புறம் வீட்டுக்கு வந்து வடாம் போட்டு விக்கிறது,அம்மாவை கவனிச்சுகறது. என்னைக்குதான் உன்னை பத்தி யோசிப்பியோ. இன்னேரம் நம்மளை பத்தி அசிங்கமா வெளில பேச ஆரம்பிச்சு இருப்பாங்க.

தமிழ் : கிடக்குறாங்கடா. ஒரு ஆணும் பெண்ணும் பழகுறது உடம்புக்குதான்னு நினைக்கறவங்க இருக்கறவரை சமுதாயம் திருந்த போறதில்லை. கஷ்டம்ன்னா வந்து உதவ போறதும் இல்லை. அப்புறம் எதற்கு? முதலில் அந்த முகமறியா நாலு பேர் உதவ வரட்டும். சாவகாசமா நம்ம உறவை சொல்லிக்கலாம்.

இளைஞன் : இந்த சிரமத்திலும் எப்படித்தான் சிரிப்பியோ.சரி இரு காப்பி போட்டு எடுத்து வரேன்.என்னைக்குதான் உனக்கு விடிவுகாலமோ?

யாருக்கு உரைத்ததோ இல்லையோ. மஞ்சுவின் குருடான மனக்கண்கள் தெளிந்தது. புறம் சொல்லி திரிந்த வாய்கள் ஊமையானது. அநாகரிகமற்ற ஒட்டும் கேட்கும் காதுகள் வெட்கின. மஞ்சுவிற்கு மனதில் ஈட்டி குத்தினார் போல் இருந்தது. இப்படி ஒரு பெண்ணை சந்தேகித்தோமே என்று. மனதிற்குள் கூறிக் கொண்டாள் "அக்கா நானிருக்கிறேனடி உன்னை காப்பாற்ற"

Wednesday, June 20, 2007

இக்க‌ரைக்கு அக்க‌ரை ப‌ச்சை..


கூடை சுமக்கும் குழந்தையின் எண்ணம்

அ,ஆ படித்ததில்லை..
நல்ல சொக்கா போட்டதில்லை..
தலையிலிருக்கும் பாரம் விட‌
படிப்பின்மை பாரம் தாங்கவில்லை..
வீட்டருகே நட்பு இல்லை..
சரியான சாதம் இல்லை..
விழாக்களை பார்த்ததில்லை..
போலியாக வாழ்ந்ததில்லை..

எனக்கு தெரிந்த ஒரே சந்தோச‌ம்
தினமும் நாங்க தின்னும் கூட்டாஞ்சோறு.. ______________________________________________
புத்தக பையுடனிருக்கும் சிறுவனின் எண்ணம்

முதுகிலிருக்கும் சுமை
படிப்பு புரியாத‌தால்..
மனதிலிருக்கும் சுமை
அன்பு கிடைக்காததால்..

நான் ஏங்கும் ஒரே சந்தோஷம்
என்றாவது கிடைக்குமா குடும்பத்துடன் கூட்டாஞ்சோறு..

Friday, June 15, 2007

சொர்க்க சுகங்கள்

காலையில் கோழித்தூக்க‌ம்..
அம்மாவின் முருக‌ல் தோசை..
த‌ங்கையுட‌ன் குடுமிபிடி ச‌ண்டை..
தோழனின் அர‌வ‌ணைப்பு..
பாட்டியின் குக்கிராம‌ம்..
எதிர்வீட்டு காத‌லின் கடைக்கண் மின்னல்..

மடையா.. இன்னும் எத்த‌னை எத்த‌னை
சொர்க்க சுகங்களை இழ‌க்க‌ போகிறாய்?
வெளிநாட்டு ப‌ய‌ண‌திற்கும்,ப‌ண‌ய‌மாக‌ ப‌ண‌த்திற்கும்..

திருடா

சீ.. சீ.. திருடா..
என் மேல் காதலென்று கூறி
ந‌ம் உதடுகளை நட்பாக்கவா பார்க்கிறாய்!!

*ஆஞ்சநேயா..*



கருணை கண்களே!
வீரமிக்க நெஞ்சமே!
வாயு புத்திரனே!
அன்பை நிருபிக்க‌
இதயத்தை பிளந்தவனே!
என்னை போன்ற இளைஞர்களின்
மனதில் தைரியமாய் இருப்பவனே!

இன்னும் எத்தனை பெயரிட்டு
உன்னை அழைக்க..
விரும்புகிறேன் என்றும்
உன் நீங்கா அன்பை பெற..
இன்னும் என்ன தவம் செய்யவேன்
உன் திருப்பாதம் அடைய..

தாய்மை


இறையன்பை குழந்தையில் புரிந்து,

செவிலியாய் சமுகத்திற்கு அர்பணித்து,

தொழு நோய் புண் கழுவி,

அவனை ஆரத் தழுவி, மனிதனாக்கி,

தன் பெறா குழந்தையாக பாவித்த‌,

தெரசா அம்மையின் கருணையில் கண்டேன்!

இப்பூவிலகின் சிறந்த தாய்மையை...

Wednesday, June 13, 2007

"ஆணவம்"

முதல் பெஞ்ச் மாணவனை காலாண்டு
தேர்வில் முந்திய போது..
மாற்றாட்டக்காரராக இருந்து திடீரேன களத்தில் வந்து
சதமடித்த போது..
விபத்தில் சிக்க இருந்த குழந்தையை
தைரியமாக காப்பாற்றிய போது..
அழகாய் இருந்த ஆணவம்- இன்று

கல்வி கற்ற முளையில் மமதை ஏறி.
நல்ல வேலையால் பணம் சேர்ந்து..
துணைவியை துச்சமென கருதி..
பாலூட்டிய தாயை முதியோர் இல்லத்தில் தள்ளி..
விகாரமாய் மாறியதென்ன?

Tuesday, June 12, 2007

ஓடாதே

அஞ்சு வருடம் ஆச்சு பெற்றவர்களை எதிர்த்து வெளியே வந்து. அப்புச்சி அப்பவே சொன்னாக என் புருசனை பத்தி. எனக்கு தான் அவர் மேல இருந்த ஆசைல உண்மை மறைஞ்சுடுச்சி..

இப்போ டவுனுல ஒண்டு குடித்தனம். இந்த மனுசன் சம்பாரிக்கறது வாய்க்கும்,வயித்துக்குமே பத்தலை. இதுல என்னாத்த சேத்தி வைக்க. பத்தாததுக்கு ரெண்டு குழந்தைக வேற. தெய்வ பரிசுன்னு சொல்ற புருஷன் குமட்டுல குத்தலாம் போல ஆத்திரம் வரும். இந்த ஆள் சுகத்துக்கு ஆண்டவனை இழுத்துகிட்டு.

அஞ்சு வருசத்துல பட்ட கஷ்டத்துல புரியுது. காதல்ன்னா ஆசை மட்டும் பத்தாது,நிதானமா முடிவேடுக்கணும்ன்னு. இப்போ மூணாவதா வயித்துல. தெய்வபரிசுன்னு சொன்ன ஆளே கருவை கலைக்க சொல்லுது.
நோவு வந்தா அம்மா நினைப்பா இருக்கும். ஒழுங்கா அவங்க சொன்ன பேச்சை கேட்டிருந்தா இந்த வருத்தம் இருந்திருகாதோன்னு இப்போ தோணுது..

சட்டியில் வைத்த கஞ்சி பொங்கி கையில் தெறித்ததில் தங்கம் சிந்தனை கலைத்தாள். தூரத்தில் குறும்பு செய்துட்டு ஓடுன பையனை பாத்து அப்பா கத்தர சத்தம் கேட்குது "ஓடாதே". வயக்காடு தாண்டி இந்த மனுஷன் கூட ஓடுனப்போ கேட்ட அப்புச்சியின் குரல் போல.தங்கம் கண்ல உருண்ட கண்ணிரில் அவர் வலி உணர்கிறாள்..

தருவாயா?!

உன்னை பார்த்ததும் என்னுள்
மலர்ந்த நட்பை
ஒரு அந்திம நேரத்தில்
உன் முகமலர்ச்சியில் கண்டேன்..

உன் நட்பென்னும் விதையை
என்னுள் வளர்க்க ஆசை..
தருவாயா தோழி?!

Monday, June 11, 2007

நீங்கா படிமங்கள்


பார்த்ததும் பிடித்த முகம்..
ஓவியம் போன்ற கண்கள்..
உன் இயல்பான வெளிப்பாடு..
என் நட்பை ஏற்ற மனது..

"உன்னை பிடித்திருக்கு" என்றபோது சந்தேகித்த புருவங்கள்..
இந்த எட்டு நாட்கள்..
இவையனைத்தும் நம் நட்பின்
நீங்கா படிமங்களாக
என்றும் என் மனதில்..

Friday, May 25, 2007

"அன்பின் வேர்கள்"

அம்மாவின் தாய்மை
அத்தையின் அக்கறை
சித்தியின் அனுசரணை
தங்கையின் கொஞ்சல்
தோழியின் நட்பு
காதலியின் கண்ணிர்
மனைவியின் இல்லறம்
மகளின் அன்புமுத்தம்
பேத்தி மாரில் தந்த உதை

ஆணென்னும் மரம் வாழ
வாழ்க்கையின் அன்பு வேர்களோ
பெண்?

எதற்கு நன்றி சொல்வேன்??

எதற்கு நன்றி சொல்வேன்??

கொள்ளை கொண்ட விழிகளுக்கா..

மனதில் ஜதி போட்ட கொலுசுக்கா..

காதலில் தித்திக்க வைத்த மனதிற்கா..

கேசத்தை கோதும் விரல்களுக்கா..

பூப்போல் காதலை உதிர்த்த இதழுக்கா..

காமத்தை முற்றுபெற வைத்த முத்ததிற்க்கா..

இருப்பதை வைத்து குடும்பம் நடத்தும் அழகிற்க்கா..

தோல்வியை தூங்க செய்த தோள்களுக்கா..

சிரமத்தில் அரவணைத்த கரங்களுக்கா..

முதுமையிலும் குறையாதிருக்கும் நேசத்திற்கா..

எல்லாம் சேர்த்து
உன்னில் தந்த கடவுளுக்கா?...

Monday, May 21, 2007

"கிருஷ்ணா"


கருமையான விழிகளில்..
வழிகின்ற கருணையில்..

பொழிகின்ற‌ அன்பினில்..
த‌ருகின்ற‌ வ‌ர‌ங்க‌ளில்..

கோகுல‌த்து குறும்பினில்..
கோபிய‌ரை க‌வ‌ர்கையில்..

புல்லாங்குழ‌ல் நாத‌த்தில்..
அது த‌ரும் ம‌ய‌க்க‌த்தில்..

இத‌ழில் வ‌ழியும் வெண்ணையில்..
அதை திருடும் வேளையில்..

பூலோக‌ லீலையில்..
அத‌னுட‌ன் த‌ரும் பாட‌த்தில்..
கண்டேனே கருமை நிற கண்ணனை!!

ராஜனின் சிந்தனைகள் - 2

இன்றைய காதல்??

காசில்லா காமம் பல இதயங்களில்..
பலமில்லா அன்பு சில மனதுகளில்..
மத,ஜாதியால் கருகும் பல சமயங்களில்..
என்றாவது சேரும் குறிஞ்சி பூக்கும் வேளையில்..
-------------------------------------------------------------------
செய்தித்தாள்

க‌த்தி முனை விட‌ பேனா முனை வ‌லிமை
ப‌டித்த‌தில் தெரிந்த‌து..
அம்முனை எரிபொருளால் ஆன‌தோ!!
ம‌துரை தீக்கிரையில் புரிந்த‌து..

Wednesday, May 16, 2007

பசி


"பசிக்கிறதம்மா!!" அந்த உயிரின் கடைசிக் குரல்!
எச்சிலில்லா நாக்கு! ஈரமறியா உதடுகள்!!
பரட்டை தலை! ஒட்டிய வயிறு!
சூம்பிய கால்கள்! அரிசியின் உருவத்தை மறந்த கண்கள்!
உணவை பார்த்த மகிழ்ச்சியில் விரல்கள்!
அம்மணத்தை மறைக்க பாதி உடை!
வயிற்றின் நிர்வாணத்தை மறைக்க உணவேங்கே?

தனி மனிதனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்!!
எனக்காக ஜகத்தை அழிக்கவேண்டாம்..
ஒரு பிடி உணவளியுங்கள்!

தானம்

கண்டதை உற்று நோக்கும் கண்களை
தானம் செய்!!

காதலுக்காக சிந்தும் ரத்தத்தை
தானம் செய்!!

கேளிக்கையில் மிந்தும் உணவை
தானம் செய்!!

ஏழைக்கு இலவசமாக கல்வியை
தானம் செய்!!

நண்பர்களுக்கு பூப்போன்ற மனதை
தானம் செய்!!

உன் பாதிக்கு உண்மையான கற்பை
தானம் செய்!!

தந்தையின் உழைப்பிற்கு உன் வெற்றி வாழ்க்கையை
தானம் செய்!!

உன்னை சீராட்டி வளர்க்கும் தாய்க்கு சிறிது "நேரமாவது?"
தானம் செய்!!

இவையனைத்தும் விளம்பரப்படுத்தாம‌ல்
நிதானமாய் செய்!!

Saturday, May 12, 2007

நிலா ரசிகருக்காக



நிலா ரசிகையின் மனது

நான் பார்த்த முதல் மின்னல்
உன் கண்களில்..

நான் ஓரக்கண்ணீல் ரசித்த முதல் ஓவியம்
உன் புன்சிரிப்பில்..

நான் கண்கள் பனித்த முதல் தருணம்
உன் செல்ல கோபத்தில்..

நான் விரும்பிய முதல் பரிசு
உன் முத்தத்தில்..

நான் கண்ட முதல் ஸ்பரிசம்
உன் தொடுதலில்..

நான் உன்னிடம் பகிரா முதல் கவிதை
என் காதல்..

நான் பெற இருக்கும் முதல் உவகை
உன் காதல்..

நிலா ரசிகனின் மனது

கள்ளி! உன் விழியினை விட
கூர்மையான வரிகளை
ஒளித்தது ஏனோ!!
இன்றைய நிலவொளியில் மிளிரதானோ!!

கருந்திட்டு கொண்ட முழுநிலவு வெட்கியது
என்னால் வந்த பரு கொண்ட உன் மதிமுகம் கண்டு..
நிலா ரசிகனாகிய நான் தூரத்தில் ஒளிரும் நிலவினை மறந்து
உன் காதலை பெற்று பூலோக நிலவின் ரசிகனானேன்!!

என் இனிய இணையதள தோழிக்கு..



கண்கள் சந்திக்கவில்லை
மலர் போன்ற மனங்கள் சந்தித்தன..
கைக் குலுக்கவில்லை
நட்பென்னும் மொட்டு விரிந்தன..

முகமறியா நமக்குள் எதற்கு
இந்த நட்பென்று வினவியதற்கு
"நம்பிக்கை" என்ற ஒற்றை வரியில்
என் நட்பினை அள்ளி சென்றவளே..

என் குரல் கேட்டு அடைந்த உவகையிலும்
என் செல்ல கோபத்தில் உருண்டோடிய கண்ணிரிலும்
அதீத அன்பினில் உரிமையுடன் தரும் திட்டுகளிலும்
தெரிகிறது உன் நட்பின் வலிமை..

உன் பெயரைவிட-உன்
நட்பின் ஆத்மாவை நேசிக்கிறேன்..
"சாட் தோழன்" என்பதை "வாழ்நாட் தோழனாக" மாற்று
என்னுயிரையும் நம் நட்பிற்கு ஈவேன்..

குறிஞ்சி மலர் போல் நம் நட்பு
மலர்ந்து மணம் வீசாவிடினும்
வாடாமலிருக்க முற்படுவோம்
வா என் தோழியே!!

Friday, May 11, 2007

காதல் பறவைகள்




கூண்டிலிருக்கும்
காதலர்கள் ஏன் எதிர் எதிராக??
ஊடலா??
தயக்கமா??

புகைப்பட கலைஞர் காதலனின்
முத்தத்தை பார்த்த வெட்கத்தில்
அவள்.. :)

காதல் வெளி உலகத்திற்கு
தெரிந்தவிட்ட பயத்தில்
அவன்!!

பாவம் அவர்களது பூப்போன்ற காதலுக்கு தெரியாது..
மதம் என்ற தீ அழித்துவிடும் என்று..

Thursday, May 10, 2007

காந்தி தாத்தா


நீ ரத்தம் சிந்தி வாங்கிய
சுதந்திரத்தை இன்னும் உன்
பேரன்கள் உணரவில்லை..

உன் தடி கொண்டு இரு தலையிலும்
தட்டி அறிவுக் கண்ணை திறந்து வை!!

அப்போழுதாவது புரியட்டும்- ஒரே
வீட்டின் வாசலை ஏன் பிளக்கிறோம் என்று!!

Tuesday, May 8, 2007

மீனவக் கவிதைகள்


அந்திவேளையில் மீனவன் வலை வீசுகிறான்..
அவற்றை புசிக்க அல்ல!!
அன்றைய கஞ்சியை ருசிக்க!!
------------------------------------------
இருட்டு வேளையில் பயத்துடன்
வலைவீசுகிறான் தமிழ் மீனவன்..
இன்றைய பலி மீனா?? நானா??

Friday, May 4, 2007

மழை





பேரிடியுடன் மழை..
விவசாயின் மனதில் புன்சிரிப்பு..
நனைந்த உடையுடன் குழந்தைகள்..
ஜன்னலோர மழைத்துளியில் அழகான பிம்பங்கள்..

ரசிக்க இத்தனை இருக்க,
காவிரித்தாயின் மனதில் தீராத கேள்வி??
"எந்த மகனின் தாகத்தை தீர்ப்பேன்!!"

Saturday, April 28, 2007

சொல்லடி என் செல்லமே..



நாம் பிறந்தநாள் முதல்
இன்றுவரை பிரிந்ததில்லை..

நான் முதல் பரிசாக தந்த பாசிமணி
இன்னும் உன் கழுத்தில்..

உன் ரகசிய அலமாரியில்
நாம் குழந்தையில் எடுத்த படம் இன்னும் அழியாமல்..

நான் தூங்கிய பிறகு "என் செல்ல அண்ணா" என்று
அலுங்காமல் தந்த முத்ததின் அழகுதான் என்ன..

என் பசியறிந்து உணவளிப்பாய்,
நோயுற்றபோது தாயானாய்,

காதலின் தோல்வியில் அழுதபோது
உன் பாசக்கரங்களால் என் வலியையும் துடைத்தாயே..

என் மகிழ்ச்சியில் குதித்ததும்,
தோல்வியில் துவண்டதும்..

நீ என்னை தந்தையென்பதும்,
நான் உன்னை தாயேன்பதும்..

மடி மீது சுமக்கும் வயதில்லாததால்தான்
மனதில் சுமந்தாயோ!!

அட.. அட..
நம் பாசத்தை விவரிக்க வார்த்தைகளேது!!

சொல்லடி என் செல்லமே
நீ என் தங்கையா?? தாயா??

ராஜனின் சிந்தனைகள்

தன் குழந்தைக்கு தராமல்
ஊரார் குழந்தைளுக்கு
தன் பால் கொடுத்து மகிழ்கிறாள்-பசு
----------------------------------------------------
என்ன ஆச்சரியம்!! சிவகாசி சிறுவர்களின்
வியர்வையில் நனைந்தும்
வெடிக்கிறதே! பட்டாசு!!!!
-----------------------------------------------------
ரிக் ஷா
பால் மணம் மாறா குழந்தை
ஏன் எமன் வாகனத்தில்
எதிர்புறமாக அமர்ந்திருக்கிறாள்??

வர போகும் எமனை எதிர்க்க
இருக்கும் இளஞ்சாவித்திரியோ!!

-----------------------------------------------------
பாடம்
ஏட்டு பாடத்தை முடிப்பதற்கு முன்
வாழ்க்கைக் பாடம் ஏனோ??
சிறு வயதில் கருகலைப்பு!!
-----------------------------------------------------
ஆஞ்சநேயா!!
மனிதர்களுக்கு தான் தண்ணிரை
குடிப்பதிலும்,பிரிப்பதிலும் பிரச்சனை..

ஆஞ்சநேயா!!கடவுளாகிய உனக்குமா!!
"என்று தணியும் இந்த தாகம்??"
"என்று முடியும் இந்த பிரிவினை மோகம்??"

ஈழத்தாய்


நம் அப்பாவின்

இதயத்தை குண்டு துளைத்ததிற்கு - இன்று

பதிலடி கொடுத்துவிட்டேனம்மா!!"


போரில் தெறித்த விரலின்
வலியை பொருட்படுத்தாமல்
கூறும் மகளை உச்சி முகர்ந்தாள்..

தாலியற்ற வெறும் கழுத்தை தடவும்
அந்த ஈழத்தாயின் மனதில் ஆயிரம் கேள்விகள்??
அதன் கரு ஒன்றே..
"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்??"

Wednesday, April 25, 2007

தியாகம்




"இன்று என் பிறந்தநாள்
கண்டிப்பாக பால்பாயாசம்.."

"அம்மா! ஜாமுன் வேணும்."
குழந்தையின் சிரிப்பில் மறந்தாள்..

பொங்கல் செய்யலாம்.. "பூரி பண்ணேன்!"
கணவரின் பாசக்குரலில் மறந்தாள்..

வடபழனி கோவில்தான்.. "கிளம்பும்மா விநாயகர் கோவிலுக்கு"
மாமியாரின் தோரணைக்குரலில் மறந்தாள்..

வாசலில் பூங்கொத்து..
தோழியை நினைத்து தன்னை மறந்தாள்..

மெல்லிய புன்னகையுடன்
தினமும் தன் ஆசைகளை மறக்கும்
என் தியாகத்தாய்!!

Friday, April 20, 2007

சித்திரம்


அந்த ஓவியன் தன் வாழ்வின்


மிகச்சிறந்த சித்திர‌த்திற்கு


சிந்தனை செய்கிறான்..


பாவம்!!


அவன்


குழந்தையின் சிரிப்பை


பார்த்ததில்லை போலும்!!

Tuesday, April 17, 2007

சன்மானம்


குழந்தை பிறந்தவுடன்
மருத்துவச்சி எதிர்ப்பார்கிறாள்..

பிறப்பு சான்றிதழுக்கு
அரசு அதிகாரி எதிர்ப்பார்கிறார்..

பள்ளியில் சேர
பள்ளிமுதல்வர் எதிர்ப்பார்க்கிறார்..

மகள் வளர்ந்தபின்
திருமணத்தில் மாமியார் எதிர்ப்பார்கிறார்..

இறந்தபின் எரிப்பதற்கு
வெட்டியான் எதிர்பார்கிறான்..

இவைகளுக்கு பெயர்
சன்மானம்!!!!

Friday, April 13, 2007

வலி



உன் தாய்
உயிர் வலிக்க
உன்னை பெற்றாள்...


தந்தையோ
உடல் வலிக்க
உனக்காக உழைத்தார்...


நண்பன் உன் வலி

தாங்கும் தூணாய்

உன் வலியையும் சுமக்கிறான்...


இவர்கள் வலியை விட
உன் காதலின் வலி பெரிதா??


என் இளைஞா!!
தாடியுடன் அவள்
நினைப்பையும் மழி...


முடங்காமல வெளியே வா..
நீ நின்று சாதிக்க இருக்கும்
உலகம் பெரியதடா...

தமிழ் புத்தாண்டு



இந்த தமிழ் புத்தாண்டு என் இனியவர்களுக்கு சிறப்பாக அமைந்திட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..


இந்நாளில்

தமிழை சிலர் நலனுக்காக சீராட்டுவதைவிட..

பலர் பாராட்ட பாடுபடுவோம்..


உற்றார்,உறவினர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்..

Monday, April 9, 2007

www.அம்மா.com



அந்த இணையதள தாய்
பாலுட்டுகிறாள்..
சீராட்டுகிறாள்..
தாலாட்டுகிறாள்..உடல் நிலை சரியில்லாத
நாட்களில் தலை வருடுகிறாள்..

புதிய இணையதளம் ஆரம்பித்துள்ளார்களாம்..
அனைத்தும் நிஜம் போல் உள்ள்தாம்..
அனைத்து நண்பர்களுக்கும் இழையில் அனுப்புகிறான்..

தாயின் அன்புக்காக ஏங்கும்
என் கணினி இளைஞன்
பை நிறைய பணத்துடனும்,
கண்ணில் கண்ணிருடனும்,
மனதில் ஏக்கத்துடனும்,
அம்மாவிற்கு தொலைப்பேசியில் கூறுகிறான்..
"மாம்,ஐ மிஸ் யூ"!!

Saturday, April 7, 2007

உயிர்



அவன் அழுவதா மகிழ்வதா
என்று தெரியாமல் இருக்கிறான்..
மருத்துவமனை படுக்கையில் உயிரில்லாமல் மனைவி..
இப்போழுது வந்த உயிருடன் குழந்தை!!

லட்சியம்


புரோட்டா கடையில் வேலை செய்து
10 வகுப்பில் அதிக மதிப்பெண் வாங்கும்
ஏழை சிறுவனின் சட்டைபையில் உள்ளதை

பணக்கார இளைஞர்கள்
பணம் செலவழித்து
தேடிக்கொண்டிருக்கின்றார்கள்!!!

சிறகு



இன்றைய ஆசிரியரின் கவலை
என் இனிய குழந்தையே..
நான் பிரம்பு கொண்டு அடிப்பது
உன் சிறகுகளை உடைக்க அல்ல!!

கொல்லன் அடிக்கதான் இரும்பும் உருபெறும்..
அதே போல் நான் அடிப்பதும்
உன்னை ஒழுக்கப்படுத்த தானடா!!
சிறகு விரித்து நல்வழியில் பறக்க தானடா!!

Thursday, March 29, 2007

நட்பு


அமைதியான இரவு..

சில்லேன்ற காற்று..

அலைகளின் தாளம்..

படகு மறைவில் காதல் ஜோடிகள்..

இருவர் மட்டும் வெட்டவெளில்..

அவன் தோளில் அவள் தலை சாய்ந்து

விசும்பி கொண்டு இருக்கிறாள்..

சமுகம் அவர்களை கேலி செய்தது

கள்ள காதல் என்று..

எத்தனை பேருக்கு புரியும் அவளின் கண்ணிர்

ஆழமான நட்பின் வெளிப்பாடு என்று??!!!

Saturday, March 3, 2007

தோழி


நீ


என்னை பிரிந்து


சென்று விட்டாய் என்று


எண்ணி எண்ணி ஏங்க


உன் காதலன் அல்ல நான்...



எனினும்


நான்


எண்ணி எண்ணி ஏங்கும்


நாம் கை கோர்த்து


திரிந்த நாட்களின்


காதலனாய் இங்கு நான்...

நான் ரசித்த கவிதைகள்

இருபுறம்

என்
ஒருபுறம் அல்ல
மறுபுறம் அல்ல
இருபுறமும் நீதான்
என்னோடு இருக்கும்
உன்னைப் பிரித்தால்
மண்ணோடு மண்ணாகத்தான்
மடிந்து வீழ்வேன்.
- பி.எம்.நாகராஜன்
-----------------------------------------------------------
வாழிய செந்தமிழ்

ஆசிரியப்பாவாழிய செந்தமிழ்!
வாழ்கநற் றமிழர்!வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக!தீதெலாம் நலிக!
அறம்வளரந் திடுக! மறம்மடி வுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்து மிக் கோங்குக!
நந்தே யத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

-பாரதியார்
---------------------------------------------------------------------
மழைத்துளி

பன்னீர்துளிகள்வேண்டாம் -
உன்வியர்வைத்துளிகள்போதும் -
அதுமண்வாசனையை கிளப்பும்
மழைத்துளி

-பி.எம்.நாகராஜன்

என் கவிதைகள்



நி பேசு மெதுவாய்!!
இதமாய்!! மென்மையாய்!!
ஏனென்றால் நீ
பேசுவதை கேட்பது
என் காதுகள் அல்ல
என் இதயம்..
--------------------------------------------------------------
உதாசினம்

இப்படியா என்னை உதாசீனிப்பது?
இதோ பார் நீ
முகம் கழுவிய நீரில்
என் முத்தங்கள்..
------------------------------------------------------------
அமைதி

அந்த அமைதி அவனுக்கு பிடிக்கவில்லை

சுனாமியில் அடித்து சென்ற விட்டின் வெறுமை!!!

-------------------------------------------
மனசு

குழம்பியவருக்கு குப்பைதொட்டி..
தெளிந்தவருக்கு கோவில்..

------------------------------------------
காதல்

உயிரில் கலந்தது..

அவளின் சுவாசகூட்டிலிருந்து
வெளிப்பட்ட புயலில் வீழ்ந்தது..

-----------------------------------------------------------