Monday, June 25, 2007

*தாலாட்டு..*


முழுநேர வேலையில் உடல் களைத்த
குழந்தையின் அரைதூக்க கண்களை பார்த்து..

சோறூட்டி,மடி சாய்த்து
தன் அன்பினில் விழி மூட வைத்து
அலுங்காமல் தோள் தட்டி.

"ஆராரோ ஆரிராரோ என் த‌ங்க‌ம்" என‌
மெல்ல‌ முணுமுணுக்கும்
தாயின் அன்பு பாட்டு..

Friday, June 22, 2007

அவளின் யதார்த்த எதிர்பார்ப்புகள்


மேகத்தறியில் நெசவு செய்ய வேண்டாம்..
நிர்வாணம் மறைக்க உடை கொடு போதும்..

சூரியனை சுருக்கி வீரனாக வேண்டாம்..
என் கற்பிற்கு காவலாயிரு போதும்..

மின்னலை பிடித்து ஆபரணமாக்க வேண்டாம்..
இருப்பதை கரைக்காமல் வாழு போதும்..

விண்மின் பிடித்து விருந்து வைக்க வேண்டாம்..
பசிக்கும் வேளை கையளவு உணவிடு போதும்..

என்னழகை பாராட்ட வேண்டாம்..
தாய்மையடைய செய் போதும்..

மக்களை ஏமாற்றி செல்வம் வேண்டாம்..
நேர்மையாயிரு போதும்..

என‌க்கு முன் சுவ‌ர்க்க‌ம் பார்க்க‌ வேண்டாம்..
உன் விழிக‌ளை பார்த்து கொண்டே ம‌ர‌ணம் தா போதும்..

Thursday, June 21, 2007

பார்வைகள்..

மஞ்சு கொஞ்சம் பிரபலம் அந்த தெருவில். அடுத்தவர் பிரச்சனைகளை வாய் மெல்ல பிறந்தவள் என்றே சொல்லலாம். கணவன் வெளிநாட்டில் இருப்பதால் ஆடம்பர வாழ்க்கை. நினைத்ததேல்லாம் கிடைக்கும்போது அவளுக்கு என்ன கவலை.

அதே தெருவில் தமிழ் என்ற இளம்பெண் .நடுத்தர குடும்பம். அவள் இருக்கும் இடம் தெரியாது. அவள் குடும்பத்தை குடிவரும் நாள் அன்று பார்த்தது. வயதான அம்மா மட்டும் இருக்கிறார். அதிகாலையில் கிளம்பி எங்கோ வேலைக்கு செல்வாள்,வருவதற்கு ராத்திரி ஆகிவிடும். அதனால்தான் என்னவோ அவள் கற்பின் மீது தெருவாசிகளுக்கு நம்பிக்கை அறவே இல்லை.

இப்போது ஒரு வாரமாக‌ அழகான வாலிபன் அவள் விட்டிற்கு வருவதும்,போவதுமாய். ஏற்கனவே முள்ளில் விழுந்த சேலையாய் இருந்த அவள் கற்பை,தெருவாசிகள் அதிகம் கிழிக்க தொடங்கினர். விசயம் மஞ்சு காதுக்கு எட்ட "பிராஜக்ட் தமிழ்" உருவானது.

அன்று வழக்கத்திற்கு மாறாக அந்த இளைஞன் இரவில் விஜ‌ய‌ம். தெருவே மின்சார‌த்த‌டையால் இருளில் மூழ்கியிருக்க தமிழ் வீட்டில் மட்டும் விளக்கு வெளிச்சம். இன்று அவர்கள் ரகசியத்தை அம்பலபடுத்தி விடவேண்டுமென மஞ்சுவும்,இன்னும் இரண்டு வாயாடிகளும் அவ்வீட்டின் பின்புற ஜன்னலில் எட்டிபார்க்கின்றனர். அவர்கள் கண்ட காட்சி மனதை உறைய வைத்தது.

சன்னல் வழியே தெரிந்தது முதலில் அவள் அம்மா. கை,கால் மரத்து ஜடமாக ஒரு மூலையில் கிழிந்த பாயாய் படுத்திருக்கிறாள். இப்புறம் அவள் விளக்கு வெளிச்சத்தில் படித்து கொண்டு. அப்புறம் அவளம்மா கழித்த மலத்தை சுத்தம் செய்து கொண்டு அந்த இளைஞன்.உரையாடல் சத்தம் கேட்க அந்த கூட்டமே காதை தீட்டிக் கொண்டது.

இளைஞன் : நல்லா பிரிப்பேர் பண்ணிருக்கியாடா.. இன்னைக்கு அம்மா முகம் அழகா தெரியுதில்ல

தமிழ் : அவள் அழகாக இருக்கிறாள்ன்னு சொன்ன முதல் ஆள் நீதாண்டா. அது இல்லைன்னுதானே என் அப்பன் எவளையோ இழுத்துட்டு ஓடிட்டான். பத்தாததுக்கு வாதம் வேற. ஏதோ படிச்சு இருக்கேண்டா. நீ விட்டுக்கு போகலை.

இளைஞன் : நானே அநாதை. எனக்கிருக்கும் ஒரே தோழி நீதான். தினமும் நம்ம ஆபிஸில் நீ கஷ்டபடுறது,அப்புறம் வீட்டுக்கு வந்து வடாம் போட்டு விக்கிறது,அம்மாவை கவனிச்சுகறது. என்னைக்குதான் உன்னை பத்தி யோசிப்பியோ. இன்னேரம் நம்மளை பத்தி அசிங்கமா வெளில பேச ஆரம்பிச்சு இருப்பாங்க.

தமிழ் : கிடக்குறாங்கடா. ஒரு ஆணும் பெண்ணும் பழகுறது உடம்புக்குதான்னு நினைக்கறவங்க இருக்கறவரை சமுதாயம் திருந்த போறதில்லை. கஷ்டம்ன்னா வந்து உதவ போறதும் இல்லை. அப்புறம் எதற்கு? முதலில் அந்த முகமறியா நாலு பேர் உதவ வரட்டும். சாவகாசமா நம்ம உறவை சொல்லிக்கலாம்.

இளைஞன் : இந்த சிரமத்திலும் எப்படித்தான் சிரிப்பியோ.சரி இரு காப்பி போட்டு எடுத்து வரேன்.என்னைக்குதான் உனக்கு விடிவுகாலமோ?

யாருக்கு உரைத்ததோ இல்லையோ. மஞ்சுவின் குருடான மனக்கண்கள் தெளிந்தது. புறம் சொல்லி திரிந்த வாய்கள் ஊமையானது. அநாகரிகமற்ற ஒட்டும் கேட்கும் காதுகள் வெட்கின. மஞ்சுவிற்கு மனதில் ஈட்டி குத்தினார் போல் இருந்தது. இப்படி ஒரு பெண்ணை சந்தேகித்தோமே என்று. மனதிற்குள் கூறிக் கொண்டாள் "அக்கா நானிருக்கிறேனடி உன்னை காப்பாற்ற"

Wednesday, June 20, 2007

இக்க‌ரைக்கு அக்க‌ரை ப‌ச்சை..


கூடை சுமக்கும் குழந்தையின் எண்ணம்

அ,ஆ படித்ததில்லை..
நல்ல சொக்கா போட்டதில்லை..
தலையிலிருக்கும் பாரம் விட‌
படிப்பின்மை பாரம் தாங்கவில்லை..
வீட்டருகே நட்பு இல்லை..
சரியான சாதம் இல்லை..
விழாக்களை பார்த்ததில்லை..
போலியாக வாழ்ந்ததில்லை..

எனக்கு தெரிந்த ஒரே சந்தோச‌ம்
தினமும் நாங்க தின்னும் கூட்டாஞ்சோறு.. ______________________________________________
புத்தக பையுடனிருக்கும் சிறுவனின் எண்ணம்

முதுகிலிருக்கும் சுமை
படிப்பு புரியாத‌தால்..
மனதிலிருக்கும் சுமை
அன்பு கிடைக்காததால்..

நான் ஏங்கும் ஒரே சந்தோஷம்
என்றாவது கிடைக்குமா குடும்பத்துடன் கூட்டாஞ்சோறு..

Friday, June 15, 2007

சொர்க்க சுகங்கள்

காலையில் கோழித்தூக்க‌ம்..
அம்மாவின் முருக‌ல் தோசை..
த‌ங்கையுட‌ன் குடுமிபிடி ச‌ண்டை..
தோழனின் அர‌வ‌ணைப்பு..
பாட்டியின் குக்கிராம‌ம்..
எதிர்வீட்டு காத‌லின் கடைக்கண் மின்னல்..

மடையா.. இன்னும் எத்த‌னை எத்த‌னை
சொர்க்க சுகங்களை இழ‌க்க‌ போகிறாய்?
வெளிநாட்டு ப‌ய‌ண‌திற்கும்,ப‌ண‌ய‌மாக‌ ப‌ண‌த்திற்கும்..

திருடா

சீ.. சீ.. திருடா..
என் மேல் காதலென்று கூறி
ந‌ம் உதடுகளை நட்பாக்கவா பார்க்கிறாய்!!

*ஆஞ்சநேயா..*



கருணை கண்களே!
வீரமிக்க நெஞ்சமே!
வாயு புத்திரனே!
அன்பை நிருபிக்க‌
இதயத்தை பிளந்தவனே!
என்னை போன்ற இளைஞர்களின்
மனதில் தைரியமாய் இருப்பவனே!

இன்னும் எத்தனை பெயரிட்டு
உன்னை அழைக்க..
விரும்புகிறேன் என்றும்
உன் நீங்கா அன்பை பெற..
இன்னும் என்ன தவம் செய்யவேன்
உன் திருப்பாதம் அடைய..

தாய்மை


இறையன்பை குழந்தையில் புரிந்து,

செவிலியாய் சமுகத்திற்கு அர்பணித்து,

தொழு நோய் புண் கழுவி,

அவனை ஆரத் தழுவி, மனிதனாக்கி,

தன் பெறா குழந்தையாக பாவித்த‌,

தெரசா அம்மையின் கருணையில் கண்டேன்!

இப்பூவிலகின் சிறந்த தாய்மையை...

Wednesday, June 13, 2007

"ஆணவம்"

முதல் பெஞ்ச் மாணவனை காலாண்டு
தேர்வில் முந்திய போது..
மாற்றாட்டக்காரராக இருந்து திடீரேன களத்தில் வந்து
சதமடித்த போது..
விபத்தில் சிக்க இருந்த குழந்தையை
தைரியமாக காப்பாற்றிய போது..
அழகாய் இருந்த ஆணவம்- இன்று

கல்வி கற்ற முளையில் மமதை ஏறி.
நல்ல வேலையால் பணம் சேர்ந்து..
துணைவியை துச்சமென கருதி..
பாலூட்டிய தாயை முதியோர் இல்லத்தில் தள்ளி..
விகாரமாய் மாறியதென்ன?

Tuesday, June 12, 2007

ஓடாதே

அஞ்சு வருடம் ஆச்சு பெற்றவர்களை எதிர்த்து வெளியே வந்து. அப்புச்சி அப்பவே சொன்னாக என் புருசனை பத்தி. எனக்கு தான் அவர் மேல இருந்த ஆசைல உண்மை மறைஞ்சுடுச்சி..

இப்போ டவுனுல ஒண்டு குடித்தனம். இந்த மனுசன் சம்பாரிக்கறது வாய்க்கும்,வயித்துக்குமே பத்தலை. இதுல என்னாத்த சேத்தி வைக்க. பத்தாததுக்கு ரெண்டு குழந்தைக வேற. தெய்வ பரிசுன்னு சொல்ற புருஷன் குமட்டுல குத்தலாம் போல ஆத்திரம் வரும். இந்த ஆள் சுகத்துக்கு ஆண்டவனை இழுத்துகிட்டு.

அஞ்சு வருசத்துல பட்ட கஷ்டத்துல புரியுது. காதல்ன்னா ஆசை மட்டும் பத்தாது,நிதானமா முடிவேடுக்கணும்ன்னு. இப்போ மூணாவதா வயித்துல. தெய்வபரிசுன்னு சொன்ன ஆளே கருவை கலைக்க சொல்லுது.
நோவு வந்தா அம்மா நினைப்பா இருக்கும். ஒழுங்கா அவங்க சொன்ன பேச்சை கேட்டிருந்தா இந்த வருத்தம் இருந்திருகாதோன்னு இப்போ தோணுது..

சட்டியில் வைத்த கஞ்சி பொங்கி கையில் தெறித்ததில் தங்கம் சிந்தனை கலைத்தாள். தூரத்தில் குறும்பு செய்துட்டு ஓடுன பையனை பாத்து அப்பா கத்தர சத்தம் கேட்குது "ஓடாதே". வயக்காடு தாண்டி இந்த மனுஷன் கூட ஓடுனப்போ கேட்ட அப்புச்சியின் குரல் போல.தங்கம் கண்ல உருண்ட கண்ணிரில் அவர் வலி உணர்கிறாள்..

தருவாயா?!

உன்னை பார்த்ததும் என்னுள்
மலர்ந்த நட்பை
ஒரு அந்திம நேரத்தில்
உன் முகமலர்ச்சியில் கண்டேன்..

உன் நட்பென்னும் விதையை
என்னுள் வளர்க்க ஆசை..
தருவாயா தோழி?!

Monday, June 11, 2007

நீங்கா படிமங்கள்


பார்த்ததும் பிடித்த முகம்..
ஓவியம் போன்ற கண்கள்..
உன் இயல்பான வெளிப்பாடு..
என் நட்பை ஏற்ற மனது..

"உன்னை பிடித்திருக்கு" என்றபோது சந்தேகித்த புருவங்கள்..
இந்த எட்டு நாட்கள்..
இவையனைத்தும் நம் நட்பின்
நீங்கா படிமங்களாக
என்றும் என் மனதில்..