Saturday, April 28, 2007

சொல்லடி என் செல்லமே..



நாம் பிறந்தநாள் முதல்
இன்றுவரை பிரிந்ததில்லை..

நான் முதல் பரிசாக தந்த பாசிமணி
இன்னும் உன் கழுத்தில்..

உன் ரகசிய அலமாரியில்
நாம் குழந்தையில் எடுத்த படம் இன்னும் அழியாமல்..

நான் தூங்கிய பிறகு "என் செல்ல அண்ணா" என்று
அலுங்காமல் தந்த முத்ததின் அழகுதான் என்ன..

என் பசியறிந்து உணவளிப்பாய்,
நோயுற்றபோது தாயானாய்,

காதலின் தோல்வியில் அழுதபோது
உன் பாசக்கரங்களால் என் வலியையும் துடைத்தாயே..

என் மகிழ்ச்சியில் குதித்ததும்,
தோல்வியில் துவண்டதும்..

நீ என்னை தந்தையென்பதும்,
நான் உன்னை தாயேன்பதும்..

மடி மீது சுமக்கும் வயதில்லாததால்தான்
மனதில் சுமந்தாயோ!!

அட.. அட..
நம் பாசத்தை விவரிக்க வார்த்தைகளேது!!

சொல்லடி என் செல்லமே
நீ என் தங்கையா?? தாயா??

ராஜனின் சிந்தனைகள்

தன் குழந்தைக்கு தராமல்
ஊரார் குழந்தைளுக்கு
தன் பால் கொடுத்து மகிழ்கிறாள்-பசு
----------------------------------------------------
என்ன ஆச்சரியம்!! சிவகாசி சிறுவர்களின்
வியர்வையில் நனைந்தும்
வெடிக்கிறதே! பட்டாசு!!!!
-----------------------------------------------------
ரிக் ஷா
பால் மணம் மாறா குழந்தை
ஏன் எமன் வாகனத்தில்
எதிர்புறமாக அமர்ந்திருக்கிறாள்??

வர போகும் எமனை எதிர்க்க
இருக்கும் இளஞ்சாவித்திரியோ!!

-----------------------------------------------------
பாடம்
ஏட்டு பாடத்தை முடிப்பதற்கு முன்
வாழ்க்கைக் பாடம் ஏனோ??
சிறு வயதில் கருகலைப்பு!!
-----------------------------------------------------
ஆஞ்சநேயா!!
மனிதர்களுக்கு தான் தண்ணிரை
குடிப்பதிலும்,பிரிப்பதிலும் பிரச்சனை..

ஆஞ்சநேயா!!கடவுளாகிய உனக்குமா!!
"என்று தணியும் இந்த தாகம்??"
"என்று முடியும் இந்த பிரிவினை மோகம்??"

ஈழத்தாய்


நம் அப்பாவின்

இதயத்தை குண்டு துளைத்ததிற்கு - இன்று

பதிலடி கொடுத்துவிட்டேனம்மா!!"


போரில் தெறித்த விரலின்
வலியை பொருட்படுத்தாமல்
கூறும் மகளை உச்சி முகர்ந்தாள்..

தாலியற்ற வெறும் கழுத்தை தடவும்
அந்த ஈழத்தாயின் மனதில் ஆயிரம் கேள்விகள்??
அதன் கரு ஒன்றே..
"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்??"

Wednesday, April 25, 2007

தியாகம்




"இன்று என் பிறந்தநாள்
கண்டிப்பாக பால்பாயாசம்.."

"அம்மா! ஜாமுன் வேணும்."
குழந்தையின் சிரிப்பில் மறந்தாள்..

பொங்கல் செய்யலாம்.. "பூரி பண்ணேன்!"
கணவரின் பாசக்குரலில் மறந்தாள்..

வடபழனி கோவில்தான்.. "கிளம்பும்மா விநாயகர் கோவிலுக்கு"
மாமியாரின் தோரணைக்குரலில் மறந்தாள்..

வாசலில் பூங்கொத்து..
தோழியை நினைத்து தன்னை மறந்தாள்..

மெல்லிய புன்னகையுடன்
தினமும் தன் ஆசைகளை மறக்கும்
என் தியாகத்தாய்!!

Friday, April 20, 2007

சித்திரம்


அந்த ஓவியன் தன் வாழ்வின்


மிகச்சிறந்த சித்திர‌த்திற்கு


சிந்தனை செய்கிறான்..


பாவம்!!


அவன்


குழந்தையின் சிரிப்பை


பார்த்ததில்லை போலும்!!

Tuesday, April 17, 2007

சன்மானம்


குழந்தை பிறந்தவுடன்
மருத்துவச்சி எதிர்ப்பார்கிறாள்..

பிறப்பு சான்றிதழுக்கு
அரசு அதிகாரி எதிர்ப்பார்கிறார்..

பள்ளியில் சேர
பள்ளிமுதல்வர் எதிர்ப்பார்க்கிறார்..

மகள் வளர்ந்தபின்
திருமணத்தில் மாமியார் எதிர்ப்பார்கிறார்..

இறந்தபின் எரிப்பதற்கு
வெட்டியான் எதிர்பார்கிறான்..

இவைகளுக்கு பெயர்
சன்மானம்!!!!

Friday, April 13, 2007

வலி



உன் தாய்
உயிர் வலிக்க
உன்னை பெற்றாள்...


தந்தையோ
உடல் வலிக்க
உனக்காக உழைத்தார்...


நண்பன் உன் வலி

தாங்கும் தூணாய்

உன் வலியையும் சுமக்கிறான்...


இவர்கள் வலியை விட
உன் காதலின் வலி பெரிதா??


என் இளைஞா!!
தாடியுடன் அவள்
நினைப்பையும் மழி...


முடங்காமல வெளியே வா..
நீ நின்று சாதிக்க இருக்கும்
உலகம் பெரியதடா...

தமிழ் புத்தாண்டு



இந்த தமிழ் புத்தாண்டு என் இனியவர்களுக்கு சிறப்பாக அமைந்திட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..


இந்நாளில்

தமிழை சிலர் நலனுக்காக சீராட்டுவதைவிட..

பலர் பாராட்ட பாடுபடுவோம்..


உற்றார்,உறவினர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்..

Monday, April 9, 2007

www.அம்மா.com



அந்த இணையதள தாய்
பாலுட்டுகிறாள்..
சீராட்டுகிறாள்..
தாலாட்டுகிறாள்..உடல் நிலை சரியில்லாத
நாட்களில் தலை வருடுகிறாள்..

புதிய இணையதளம் ஆரம்பித்துள்ளார்களாம்..
அனைத்தும் நிஜம் போல் உள்ள்தாம்..
அனைத்து நண்பர்களுக்கும் இழையில் அனுப்புகிறான்..

தாயின் அன்புக்காக ஏங்கும்
என் கணினி இளைஞன்
பை நிறைய பணத்துடனும்,
கண்ணில் கண்ணிருடனும்,
மனதில் ஏக்கத்துடனும்,
அம்மாவிற்கு தொலைப்பேசியில் கூறுகிறான்..
"மாம்,ஐ மிஸ் யூ"!!

Saturday, April 7, 2007

உயிர்



அவன் அழுவதா மகிழ்வதா
என்று தெரியாமல் இருக்கிறான்..
மருத்துவமனை படுக்கையில் உயிரில்லாமல் மனைவி..
இப்போழுது வந்த உயிருடன் குழந்தை!!

லட்சியம்


புரோட்டா கடையில் வேலை செய்து
10 வகுப்பில் அதிக மதிப்பெண் வாங்கும்
ஏழை சிறுவனின் சட்டைபையில் உள்ளதை

பணக்கார இளைஞர்கள்
பணம் செலவழித்து
தேடிக்கொண்டிருக்கின்றார்கள்!!!

சிறகு



இன்றைய ஆசிரியரின் கவலை
என் இனிய குழந்தையே..
நான் பிரம்பு கொண்டு அடிப்பது
உன் சிறகுகளை உடைக்க அல்ல!!

கொல்லன் அடிக்கதான் இரும்பும் உருபெறும்..
அதே போல் நான் அடிப்பதும்
உன்னை ஒழுக்கப்படுத்த தானடா!!
சிறகு விரித்து நல்வழியில் பறக்க தானடா!!